எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ் அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில், கீழே வீழ்ந்து தேவராஜா மனோரம்மா (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
உடல் பலவீனம் காரணமாக கீழே வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டு, அந்தப் பெண்ணின் சடலம் மேற்படி மயானத்தில் அதே மாதம் 10 ஆம் திகதி புதைக்கப்பட்டது.
எனினும், தனது தாயாரை அவரது சகோதரர்கள் கொலை செய்தனர் என அந்தப் பெண்ணின் பிள்ளைகளில் ஒருவர், வெளிநாட்டில் (பிரான்ஸ்) இருந்து வந்த தந்தைக்கு கூறினார். இதனையடுத்து, ‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்’ என கணவர் பொன்னுத்துரை தேவராஜா, மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணியூடாக வழக்குத் தாக்கல்
செய்தார்.
இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் பிரகாரம் ‘சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற உத்தரவை நீதிவான் ரீ.கருணாகரன் பிறப்பித்தார்.
அதற்கிணங்க நீதிவான், மன்னார் சட்டவைத்தியதிகாரி டபிள்யூ ஆர்.ஈ.எஸ்.ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (30) சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை பரிசோதனைக்கும், சான்றுப்பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கும் உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக எவரும் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கவில்லையென்பது
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>