யாழ் – கொழும்பு சொகுசு பேருந்து பயண விபத்து கொலைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி
முகப்புத்தக பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“பல வருடங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு விபத்துகள் ஏற்பட்டு விபத்தில் சிக்குண்டவர்கள் பலர் சாவடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் வாழ்நாள் சோகங்களையும் கஷ்டங்களையும் சுமக்கின்றார்கள்
யார் பொறுப்பை ஏற்பது?1. பொலிஸார் ?
2. வாகன உரிமையாளர்கள்?
3. வாகனச் சாரதிகள்?
இருப்பினும் விபத்தொன்றின் பின்னர் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க போவதாகவும் செய்தி வருகின்றமை நகைப்பிற்குரியது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு இவ்வாறான பேருந்து ஒன்றில் பயணத்தை ஆரம்பித்தேன். கண் விழித்துப் பார்த்தபோது பேருந்து காலை 4 மணியளவில் கொழும்பை அடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு விரைவாக பயணம் செய்வது மிக ஆபத்தானது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான பாதையில்
1. பல இடங்களில் பாதைகளில் வளைவுகள் காணப்படுகின்றது. 2. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான பகுதிகளில் கால்நடைகள் எப்போதும் வீதிக்கு வரும் அபாயம்
காணப்படுகின்றது.
3. நாய்கள் எப்போதும் வீதியை கடக்கலாம்.
4. பல இடங்களில் குறுகிய அகலத்திலான பாலங்கள் காணப்படுகின்றது.
5. பல நகரங்களை கடந்து செல்ல வேண்டி
இருக்கின்றது.
6. திடீரென பிரதான வீதிக்கு இரு பக்கங்களிலும் இருந்து வாகனங்கள் வருகின்ற நிலை காணப்படுகின்றது. ( பலரும் பயணம் முடியும் வரை பதட்டமான மனநிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது)
ஆகவே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை
வாகனத்தை செலுத்துவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் 70 km/hrற்கு அப்பால் வாகனத்தை செலுத்தினால் வாகனம் விபத்தொன்றில் சிக்கிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
பேருந்து விபத்துகளை எவ்வாறு தவிர்க்க முடியும்?
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை. வவுனியாவில் இருந்து புத்தளம் சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
புத்தளத்தில் இருந்து கொழும்பு சென்றடைய சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
ஆகவே பொலிஸார் பிரதான நகரங்களை கடக்கும் நேரங்களை அனுமதித்து கண்காணித்தால் போதும்.
வாகன உரிமையாளர்கள் இந்த நீதியை விளங்கிக் கொண்டால் போதும் சாரதிகள் தமது உயிர் மற்றும் தங்கள் கைகளில் பல உயிர்கள் தங்கி இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில்
கொள்ள வேண்டும்.
யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள்
யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்.
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM
தூரத்தில் உள்ளது.
வவுனியாவிலிருந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.
அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ். நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசம்.
எனவே வாகன சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன்
தொடர முடியும்.
இதற்குத்தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள். மோட்டார் வாகன பாவனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இவ்வழிபாட்டு தலங்களுடன் கூடிய நிறுத்துமிடங்கள் வீதி விபத்துக்களை பெருமளவு குறைக்க உதவும்.
நமது முன்னோர்களது எந்தவோர் செயலும், மிகநுட்பமான காரணகாரியத்துடன், மனிதனது ‘நன்மை’ ஒன்றை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டவையாகும். இது வெறும் பதிவு மட்டும் என்று எண்ணவேண்டாம்” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.