யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக நாவாந்துறை, காக்கைதீவு
சூரியவெளி, நித்தியஒளி, வசந்தபுரம், சமிநகர் போன்ற பகுதிகளில் பெருகி வரும் மழை வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் புகும் ஆபாயம் உள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச செயலக தகவலின்
அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக ஜே 85 கிராம சேவையாளர் பிரிவில் நாவாந்துறை வடக்கு பகுதியில் அமைந்துள்ள 308 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அனர்த்த முகாமைத்துவத்தினால் வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச கிராமசேவையாளர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக