பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்திகளை, பொருளாதார வலயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான காலம் தற்போது
எட்டியுள்ளது.
வடக்கில் குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் சாதகமான கருத்திலுள்ளனர். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.
இதனைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு விமான ஓடு பாதைகள் உட்பட பல அபிவிருத்திகளைச் செய்வதற்கு நிலப்பரப்பு தேவையாக உள்ளது.
இதற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்ற போதும் நாம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பயனாக மக்களின் காணிகளை சுவீகரிக்காது கடற்கரையோரங்களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான திட்டங்கள்
முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக