விலங்கு விசர் நோய்த் தொற்றுக்குள்ளான நாயினுடைய பல்லின் சிறுகீறல் விவசாயியின் உயிரைப் பறித்த சம்பவம் முல்லைத்தீவில்
இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு குமாரபுரம் முள்ளியவளை யைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராமையா சிவசாமி (வயது- –58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தண்ணீரைக் கண்டதும் அவர் பயப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த டிசெம்பர் மாதம் விவசாயியின் வளர்ப்பு நாய்க்குட்டி அவரைக் கௌவியது. அதனால் நாய்க் குட்டியின் பல்
கீறியுள்ளது. அவ்வாறு கீறினாலும் குருதி வரவில்லை. சிறு கீறலே காணப்பட்டதனால் அவர் கவனிக்காது
விட்டுவிட்டார்.
சில நாட்களின் பின் குறித்த நாய்க்குட்டி அவரது வீட்டில் உள்ள பூனை உள்ளிட்ட பிராணிகளைத் துரத்திக் கடிக்கத் தொடங்கியது. அதனால் நாய்க்குட்டியைப் பிடித்துக் கட்டியுள்ளனர். 3 நாள்களில் பின் நாய்க்குட்டி
இறந்து விட்டது.
சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் குறித்த விவசாயி தோட்டத்தில் பயிர்களுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார். தண்ணீரைக் கண்டதும் அவர் பயத்தை உணர்ந்தார். வீட்டிலும் தண்ணீரைக் கண்டதும் அவர்
பயமடைந்தார்.
வீட்டிலுள்ளவர்கள் அவரின் செயற்பாட்டை அவதானித்தனர். அதனால் அவரை மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றினர்.
அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.45 மணியளவில் அவர் உயிரிழந்தார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின்போது அவருக்கு விலங்கு விசர் நோய்த் தொற்று ஏற்பட்டதனால் இறப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டு உடலத்தை நேற்று உறவினர்களிடம்
ஒப்படைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக