சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை சவுதி அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே இக் காலப்பகுதியினை பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்து 200 சட்டவிரோத பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சவுதி அரேபியாவின் தொழில் உறவு அமைச்சருக்கும் சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்திக்குமான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தது.
அதன் போது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் இலங்கைப் பணியாளர்கள் அங்கு தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுவதற்கான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்களின் தொழில் உரிமைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு இலங்கை பணியாளர்களுக்கான தொழில் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக