யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன் (வயது 58) என்பவர் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் காணாமல் போனோரின் உறவுகளை கண்டெடுத்து தருவதாகவும், இடமாற்றம் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகவும் கூறி சுமார் 13 லட்சம் ருபா நிதி மோசடி
செய்துள்ளார்.
அத்துடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு, இடமாற்றம் செய்து தருவதாக கூறி 4 லட்சம் ரூபாவை நபர் ஒருவரிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் உங்களின் உறவு யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க வேண்டும். என்று கூறியும். மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்புச் செயலாளர் என்றும் பாசாங்கு காட்டி ஏமாற்றி வந்துள்ளார்.
குறித்த விடயத்தினை அறிந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விசேட புலானய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த நபர் புலனாய்வு பிரிவினரினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த நபர் தான் ஆளுநரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும்
தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக