வட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி
இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். இதற்கமையவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 மார்ச் 15ம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் யாழ்ப்பாண கல்லூரிக்கும், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த துடுப்பாட்ட போட்டியில் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது அமலன் என்பவர் அடித்து கொல்லப்பட்டிருந்தார்.
இதில் தொடர்புடையவர்கள் என 6 பேருக்கு எதிராக யாழ் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சந்தேகநபரிற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு
விசாரணையொன்றின் பின், நீதிபதி இளஞ்செழியன் வழக்கு பற்றி கருத்து கூறினார் என சந்தேகநபரால் சுமந்திரனிடம் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் தகுதி இளஞ்செழியனிற்கு இல்லையென்றும், வேறொரு மேல்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பான பதில் அறிக்கையை சட்டமா அதிபர் எதிர்வரும் ஒக்ரோபர் 20ம் திகதி வரை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதுவரை கொலைவழக்கு விசாரணையை யாழ் மேல்நீதிமன்றில் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மேன்முறையீட்டு நீதிமன்று அறிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக