டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு சென்ற இளம் தாய் ஒருவர் நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த நந்தகுமார் லக்ஷி (வயது 34) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே மேற்படி உயிரிழந்தவராவார்.
குறித்த பெண்னுக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் இருந்தகாரணத்தால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் நேற்றைய தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்த இவர், வெளிநோயாளர் பிரிவில் வைத்தியரை சந்திக்க காத்திருந்த போதே உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது மேற்படி பெண் டெங்கு நோய் தாக்கத்தால் உயிரிழந்திருந்தமை
உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த இறப்பின் மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களை விட இந்தவருடம் டெங்கு நோய் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக