நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோவிட் தடுப்பு விசேட கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்
தெரிவிக்கையில்,
பிரதம மந்திரி அலுலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைவாக தற்பொழுது நிலவி வருகின்ற கோவிட் தொற்றி னுடைய தாக்கம் காரணமாக எமது மாவட்டத்தில் ஏதாவது ஒரு பிரதேசம் முடக்கப்படும் சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டிய
தேவை இருக்கின்றது.
அந்த வகையிலே, அவ்வாறான சேவையில் ஈடுபட வேண்டிய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களிற்கிடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அவ்வாறான சூழ்நிலை ஏற்படுகின்ற போது, மக்களுக்கு
அத்தியாவசிய தேவைகள் கிடைக்கக்கூடிய வகையில் கூட்டுறவு சங்கங்கள், சதோச மற்றும் வர்த்தக சங்கங்களிற்கு அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்களிற்கு நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்கின்றது என்பதையும் இன்று கலந்துரையாடியிருந்தோம். அத்துடன் அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணிகளுடன் பணிகளை முன்னெடுப்பதற்கும், குறிப்பாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்ற அலுவலர்களைக் கொண்டு பணிகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றோம்.
கிளிநொச்சியில் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருக்கின்றவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலைமையிலும் இருக்கின்றார்கள். அந்த வகையில் இரண்டு மாணவிகள் தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள். அவர்களுடன் தொடர்புள்ள மேலும் 6 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 14 பொலிஸார் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தான் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் எந்த சந்தர்ப்பத்திலும் முகக்கவசங்களை அணிந்தவாறே வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதேவேளை நுகர்வோரும் அவ்வாறான செயற்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் நாங்கள்
கேட்டிருக்கின்றோம்.
இது தொடர்பாக சுகாதார திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் எடுக்கப்படும் பி .சி .ஆர் மாதிரிகளை பரிசோதனைகளிற்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தற்பொழுது இருக்கின்ற சூழலில் அதிகளவான பி.சி.ஆர் பதிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் தேக்க நிலை காணப்படுகின்றது. பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தற்பொழுது காணப்படுகின்றது என்றும்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக